மனதின் குரல்

modi-mann-ki-baat oct 2020

மனதின் குரல் ஒலிபரப்பு நாள் : 25.10.2020

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று விஜயதஸமி அதாவது தஸரா புனித நன்னாள்.  இந்தப் பவித்திரமான நாளன்று உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள்.  இந்த தஸரா புனிதநாளானது, பொய்மை மீது வாய்மையின் வெற்றியைக் குறிக்கிறது.  ஆனால் இதோடு கூடவே, ஒருவகையில் சங்கடங்களின் மீது மனவுறுதியின் வெற்றியையும் குறிக்கும் நல்வேளை.  இன்று, நீங்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறீர்கள், கண்ணியத்தைக் கடைப்பிடித்து, இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறீர்கள் ஆகையால், நாம் எதிர்கொண்டிருக்கும் போரில் நமது வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  முன்பெல்லாம் துர்க்கையின் பந்தலில், அன்னையை தரிசனம் செய்ய ஏகப்பட்ட கூட்டம் முண்டியடிக்கும் – ஒரு பெரிய திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்;  ஆனால் இந்த முறையோ அப்படி நடக்க முடியவில்லை.  முன்பெல்லாம் தஸரா என்றால் பிரும்மாண்டமான கண்காட்சிகள் இடம்பெறும்; ஆனால் இந்த முறையோ அவற்றின் வடிவமே வித்தியாசமாகி விட்டிருக்கிறது.  ராம்லீலா பண்டிகையும் கூட, மிகவும் கவரக்கூடிய ஒன்று; அதிலேயுமே கூட சிலவகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  முன்பெல்லாம் நவராத்திரியை முன்னிட்டு குஜாராத்திலே கர்பாவின் ஒய்யாரம் அனைத்துத் திசைகளிலும் படர்ந்திருக்கும்; இந்த முறையோ பெரிய அளவிலான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.  இப்போதும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, பல திருவிழாக்கள்-பண்டிகைகள் வரவிருக்கின்றன.  அடுத்து ஈத் வரவிருக்கிறது,  சரத் பௌர்ணமி, வால்மீகி ஜெயந்தி, பிறகு தன்தேரஸ், தீபாவளி, பாயிதூஜ், சடீமையா பூஜை, குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாள் ஆகியன வரவிருக்கின்றன.  கொரோனாவின் இந்த பெருஞ்சங்கட காலத்தில், நாம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், வரையறைகளுக்குள்ளாக செயல்பட வேண்டும். 

நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான்.  என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும்.  இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள்.  பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.  ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.  சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.

நண்பர்களே, பண்டிகைகளின் இந்தக் குதூகலங்களுக்கு இடையே, நாம் பொது முடக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.   சுகாதாரப் பணியாளர்கள், வீட்டுவேலை செய்வோர், அக்கம்பக்கத்தில் காய்கறி விற்பனை செய்வோர், பால் விற்பனையாளர், காவலாளிகள் போன்ற சமூகத்தின் அங்கத்தினர் – நண்பர்களை பொது முடக்கத்தின் போது நாம் அணுக்கத்தில் அறிந்து கொண்டோம், நமது வாழ்க்கையில் இவர்களின் பங்கு என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொண்டோம்.  இடர்கள் நிறைந்த வேளையிலே, இவர்கள் நம்மோடு இருந்தார்கள், நம்மனைவருக்கும் தோள் கொடுத்தார்கள்.  இப்போது பண்டிகைகளின் போது, நமது சந்தோஷங்களின் போது, நாம் இவர்களுக்குக் கரம்நீட்ட வேண்டும்.  எந்த அளவுக்கு சாத்தியமோ, அந்த அளவுக்கு அவர்களுக்கும் நாம் நமது சந்தோஷங்களில் கண்டிப்பாகப் பங்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.  இந்தச் செயல்பாட்டை, குடும்பத்தின் உறுப்பினர்களாகச் செய்யுங்கள், பிறகு பாருங்கள், உங்கள் சந்தோஷங்கள் எத்தனை பெருகும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

நண்பர்களே, மேலும் நாம் நமது அசகாய இராணுவ வீரர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்; இந்தப் பண்டிகைகளின் போதும், அவர்கள் எல்லைப்புறங்களில் உறுதியாக இருக்கின்றார்கள்.  பாரத அன்னையின் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  நாம் பண்டிகைகளைக் கொண்டாடும் வேளையில், அவர்களை நினைத்துக் கொண்டு தான் கொண்டாட வேண்டும்.  நம் வீட்டில் ஒரு தீபம், பாரத அன்னையின் இந்த வீரம்நிறை மைந்தர்களுக்காக ஏற்ற வேண்டும்.  எனதருமை வீரர்களே, நீங்கள் எல்லைப்புறங்களில் இருந்தாலும் சரி, ஒட்டுமொத்த தேசமும் உங்களோடு நிற்கிறது, உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறது என்று நான் வீரர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.  பனிச்சிகரங்களில் எந்த வீரர்கள் இருக்கின்றார்களோ, அவர்களின் குடும்பங்களுக்கும் நான் இன்று என் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.  நாட்டுப்பணியில், ஏதோ ஒரு கடமையை ஆற்றிவருவதால், வீட்டிலே தங்கள் குடும்பத்தாரோடு இல்லாதிருக்கும் ஒவ்வொருவருக்கும், நான் என் இதயபூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுப்போம் என்ற நிலைப்பாட்டிலே செயல்படும் வேளையில், உலகத்தார் நமது உள்ளூர் பொருட்களை விரும்புபவர்களாக மாறி வருகிறார்கள்.  நமது உள்ளூர் பொருட்கள் பலவற்றில் உலக அளவில் வியாபிக்கும் பெரும்சக்தி இருக்கிறது.  எடுத்துக்காட்டாக கதராடைகள்.  நீண்டகாலம் வரை கதராடைகள் எளிமையின் அடையாளமாக இருந்து வந்திருந்தாலும், நமது கதராடைகள் இன்று சூழலுக்கு நேசமான துணிகள் என்ற அளவில் அறியப்பட்டு வருகின்றன.  ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் இவை உடலுக்கு உகந்த துணிகள், அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்ற துணிகள் என்பதோடு, இன்று கதராடைகள் என்பது fashion statement என்ற நடப்பு வழக்கின் வெளிப்பாடாகவும் ஆகி வருகின்றன.  கதராடைகள் மீதான நன்மதிப்பு பெருகிவரும் அதே வேளையில், உலகின் பல இடங்களில் கதராடைகள் நெசவு செய்யப்பட்டு வருகின்றன.  மெக்சிகோவின் ஓஹாகா என்ற இடத்தின் பல கிராமங்களில் வட்டார கிராமப்புற அளவில் கதராடைகள் நெசவுப்பணி நடந்து வருகிறது.  இன்று, இங்கு நெசவு செய்யப்படும் கதராடைகள் ஓஹாகா கதராடைகள் என்ற பெயரில் பிரசித்தி பெறத் தொடங்கி விட்டன.  ஓஹாகாவிற்கு கதராடைகள் எப்படி போய்ச் சேர்ந்தன என்பதே கூட மிகவும் சுவாரசியமான விஷயம்.  இன்னும் சொல்லப் போனால், மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு இளைஞரான மார்க் ப்ரவுன் ஒருமுறை அண்ணல் காந்தியடிகள் பற்றிய திரைப்படத்தைப் பார்த்தார்.  இந்தப் படத்தைப் பார்த்த ப்ரவுன், இதனால் உத்வேகம் அடைந்து, இந்தியாவில் பாபுவின் ஆசிரமம் வந்து, பாபுவைப் பற்றி மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டார்.  கதர் என்பது வெறும் ஒரு துணியல்ல, இது ஒரு முழுமையான வாழ்க்கைமுறை என்பதை அப்போது தான் ப்ரவுன் புரிந்து கொண்டார்.  இதன் வாயிலாக எப்படி கிராமப்புற பொருளாதாரமும், சுயசார்பும் இணைந்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட ப்ரவுன், மிகவும் கருத்தூக்கம் பெற்றார்.  மெக்சிகோ சென்று கதர் தொடர்பான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ப்ரவுன் உறுதி பூண்டார்.  இவர் மெக்சிகோவின் ஓஹாகாவில் கிராமவாசிகளுக்குக் கதர் பற்றிய செயல்பாட்டைக் கற்றுக் கொடுத்தார், அவர்களுக்குப் பயிற்சி அளித்தார், இன்று ஓஹாகா கதர் என்பது ஒரு ப்ராண்டாகவே மாறி விட்டது.  இந்தத் திட்டம் பற்றிய இணையதளத்தில், The Symbol of Dharma in Motion, அதாவது தர்மத்தின் அடையாளத்தின் இயக்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த இணையதளத்தில் மார்க் ப்ரவுனின் மிகவும் சுவாரசியமான நேர்காணலும் இருக்கிறது.  தொடக்கத்தில் கதர் பற்றிய ஐயப்பாடுகள் மக்கள் மனங்களில் இருந்ததாகவும், பின்னர் இதன் மீது அவர்களின் ஆர்வம் அதிகரித்த போது, இதற்கென ஒரு சந்தையும் தயாரானது என்று தெரிவித்திருக்கிறார்.  இவை ராமராஜ்ஜியம் தொடர்பான விஷயங்கள், நீங்கள் மக்களின் தேவைகளை நிறைவு செய்தால், மக்களே உங்களோடு தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்று கூறுகிறார்.

நண்பர்களே, தில்லியின் கன்னோட் ப்ளேஸ் என்ற இடத்தில் கதர் விற்பனையகத்தில் இந்த முறை காந்தி ஜெயந்தியன்று, ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனை ஆகியிருக்கிறது.  இதைப் போல கொரோனா காலத்தில் கதரில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.  நாடெங்கிலும் பல இடங்களில் சுய உதவிக் குழுக்களும், பிற அமைப்புகளும் கதர்த் துணியாலான முகக் கவசங்களைத் தயார் செய்து வருகிறார்கள்.  உத்திர பிரதேசத்தின் பாராபங்கியில் சுமன் தேவி என்ற ஒரு பெண்மணி, தனது சுய உதவிக் குழுவின் சகப்பெண்களோடு இணைந்து, கதரில் தயார் செய்யப்பட்ட முககவசத்தை அணிவதைத் தொடங்கியிருக்கிறார்.  மெல்ல மெல்ல அவரோடு கூட, பிற பெண்களும் இணையத் தொடங்கினார்கள், இப்போது இவர்கள் அனைவரும் இணைந்து, ஆயிரக்கணக்கில் கதராலான முகக்கவசங்களைத் தயார் செய்து வருகிறார்கள்.  நமது உள்ளூர் பொருட்களின் அழகே என்னவென்றால், இவற்றோடு பெரும்பாலும் ஒரு முழுமையான நோக்கு பளிச்சிடுகிறது. 

என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது பொருட்கள் மீது நமக்கு பெருமிதம் ஏற்படும் போது, உலகிலும் இவற்றின் மீதான ஆர்வமும் அதிகரிக்கிறது.  நமது ஆன்மீகம், யோகக்கலை, ஆயுர்வேதம் ஆகியன உலகனைத்தையும் கவர்ந்திருக்கின்றன.  நமது பல விளையாட்டுக்களும் உலகத்தாரை ஈர்த்திருக்கின்றன.  இப்போது நமது மல்கம்ப் விளையாட்டு பல நாடுகளில் பிரபலமாகி வருகிறது.  இது தமிழ்நாட்டின் வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீரவிளையாட்டினை ஒத்தது.  அமெரிக்காவின் சின்மய் பாடன்கரும், ப்ரக்யா பாடன்கரும் தங்கள் வீட்டில் இந்த மல்கம்ப் விளையாட்டைக் கற்பிக்கத் தொடங்கிய போது, அவர்களுக்கு இத்தனை வெற்றி கிடைக்கும் என்பதை அவர்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.  அமெரிக்காவில் இன்று பல இடங்களில் மல்கம்ப் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  பெரிய எண்ணிக்கையில் அமெரிக்க இளைஞர்கள் இதோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள், மல்கம்பைக் கற்றுக் கொண்டு வருகின்றார்கள்.  இன்று ஜெர்மனியில், போலந்தில், மலேஷியாவில் என சுமார் 20 பல்வேறு நாடுகளிலும், மல்கம்ப் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  இன்று இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் தொடங்கப்பட்டு இருக்கிறது.  இதில் பல நாடுகள் பங்கெடுத்தும் வருகின்றன.  பாரதத்திலே பண்டைய காலம் தொட்டு இருந்துவரும் இப்படிப்பட்ட பல விளையாட்டுக்கள், நமக்கு உள்ளே அசாதாரணமான வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.  நமது மனம், உடலின் சீர்நிலை ஆகியவற்றுக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகின்றன.  புதிய தலைமுறையைச் சேர்ந்த நமது இளைஞர்களுக்கு ஒருவேளை மல்கம்ப் பற்றிய தெரிதல் இல்லாமல் இருக்கலாம்.  நீங்கள் இதுபற்றி இணையத்தில் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  

நண்பர்களே, நமது நாட்டிலே எத்தனையோ தற்காப்புக் கலைகள் இருக்கின்றன.  நமது இளைய நண்பர்கள் இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டு, இவற்றைக் கற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  மேலும் காலத்திற்கு ஏற்றவகையிலே, இவற்றில் நீங்கள் புதுமைகளையும் புகுத்த வேண்டும்.  வாழ்க்கையில் பெரிய சவால்கள் இல்லாது போனால், ஆளுமையின் சிறப்புகள் வெளிப்படாமல் போய் விடும்.  ஆகையால் உங்களுக்கு நீங்களே சவால் விடுத்துக் கொள்ளுங்கள். 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, learning is growing, அதாவது கற்றலே வளர்ச்சி என்பார்கள்.  இன்று மனதின் குரலில் ஒரு விசித்திரமான தாகம் இருக்கும் ஒரு நபரை உங்களுக்கு நான் அறிமுகம் செய்ய இருக்கிறேன்.  படித்தல்-கற்றல் ஆகியவற்றில் இருக்கும் சந்தோஷங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாகம் இது.  இவர் தான் பொன். மாரியப்பன் அவர்கள்.  இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் வசித்து வருகிறார்.  தூத்துக்குடி முத்துக்களின் நகரம் என்று அறியப்படுகிறது.  ஒருகாலத்தில் பாண்டிய மன்னர்களின் மகத்துவம் வாய்ந்த மையமாக இது இருந்தது.  இங்கே வசித்துவரும் என்னுடைய நண்பரான பொன் மாரியப்பன் அவர்கள் முடிதிருத்தும் தொழிலைச் செய்து வருகிறார், ஒரு சலூன்கடை நடத்தி வருகிறார்.  மிகவும் சிறிய சலூன்கடை தான் அது.  அதிலே அவர் விசித்திரமான, உத்வேகம்தரும் ஒரு பணியைச் செய்திருக்கிறார்.  தனது சலூன்கடையின் ஒரு பாகத்தில் அவர் நூலகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.  சலூன்கடைக்கு வருபவர் தனது முறைவரும் வரை காத்திருக்கும் போது, அங்கே ஒரு புத்தகத்தைப் படிக்கிறார், படித்தவை பற்றி எழுதுகிறார் என்றால், பொன். மாரியப்பன் அவர்கள் அந்த வாடிக்கையாளருக்கு ஒரு தள்ளுபடி அளிக்கிறார்.  சுவாரசியமாக இருக்கிறது இல்லையா!!  வாருங்கள், தூத்துக்குடி செல்வோம், பொன். மாரியப்பன் அவர்களோடு உரையாடுவோம்.

பிரதமர்:  பொன். மாரியப்பன் அவர்களே, வணக்கம்.  நல்லா இருக்கீங்களா?

பொன் மாரியப்பன்:  பெருமதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, வணக்கம்.

பிரதமர்:  வணக்கம், வணக்கம்…. உங்களுக்கு இந்த நூலகம் பற்றிய எண்ணம் எபப்டி ஏற்பட்டது?

பொன் மாரியப்பன்:  நான் 8ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.  என் குடும்பச் சூழ்நிலை காரணமாக என்னால் மேலே படிக்க முடியவில்லை.  படித்தவர்களைப் பார்க்கும் போது, என்னால் படிக்க முடியவில்லையே என் மனதிலே என்ற குறை தோன்றும்.   ஆகையால் நாம் ஏன் ஒரு நூலகத்தை ஏற்படுத்தி, அதனால் பலரும் பலனடையச் செய்யக்கூடாது என்று தோன்றியது, இதுவே எனக்கு உத்வேகம் அளித்தது.

பிரதமர்:  உங்களுக்கு எந்தப் புத்தகம் பிடிக்கும்?

பொன் மாரியப்பன்:  எனக்குத் திருக்குறள் மிகவும் பிடிக்கும் ஐயா.

பிரதமர்:  உங்களோடு பேசியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.  நல்வாழ்த்துக்கள்.

பொன் மாரியப்பன்:  மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, உங்களோடு பேசியது எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

பிரதமர்:  நல்வாழ்த்துக்கள்.

பொன் மாரியப்பன்:  மிக்க நன்றி ஐயா.

பிரதமர்:  தேங்க்யூ.  

நாம் இப்போது பொன் மாரியப்பன் அவர்களோடு உரையாற்றினோம்.  பாருங்கள், எப்படியெல்லாம் அவர் மக்களின் முடியை அழகு செய்வதோடு கூடவே, அவர்களின் வாழ்க்கையையும் அழகுபார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்!  திருக்குறள் மீது மக்கள் மனங்களில் இருக்கும் பிரியத்தைப் பற்றிக் கேள்விப்படும் போது மிகவும் நன்றாக இருக்கிறது.  திருக்குறள் அனைவரையும் கவர்ந்திருப்பதைப் பற்றி நீங்கள் அனைவருமே கேட்டீர்கள்.  இன்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திருக்குறள் கிடைக்கிறது.  வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இதைப் படித்துப் பாருங்கள்.  ஒருவகையில் வாழ்க்கைப் பாதையைக் குறள் துலக்கிக் காட்டும் ஒரு வழிகாட்டி.

நண்பர்களே, நாடெங்கிலும் ஞானத்தைப் பரப்புவதில் பலருக்கு அபாரமான சந்தோஷம் கிடைத்து வருகிறது என்பதை அறிந்து என் மனம் மகிழ்கிறது.  அனைவரிடத்திலும் படிக்க வேண்டும் என்ற உத்வேகம் நிறைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் நபர்கள் இவர்கள்.  மத்திய பிரதேசத்தின் சிங்கரௌலியைச் சேர்ந்த ஒரு ஆசிரியையான உஷா துபே அவர்கள், தனது ஸ்கூட்டி வண்டியையே ஒரு நடமாடும் நூலகமாக மாற்றியமைத்திருக்கிறார்.  இவர் ஒவ்வொரு நாளும் நடமாடும் இந்த நூலகத்தோடு ஏதோ ஒரு கிராமம் செல்கிறார், அங்கே இருக்கும் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்.  குழந்தைகள் இவரை புத்தக அக்கா என்றே மிகுந்த பிரியத்தோடு அழைக்கிறார்கள்.  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அருணாச்சல் பிரதேசத்தின் நிர்ஜுலியின் ராயோ கிராமத்தில் ஒரு சுய உதவி நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  உள்ளபடியே இங்கே வசிக்கும் மீனா குருங்க், திவாங்க் ஹோஸாயி ஆகியோருக்கு ஊரில் எந்த நூலகமும் இல்லை என்பது தெரிய வந்த போது, இவர்கள் இதற்கான நிதியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.  இந்த நூலகத்திற்கென எந்த ஒரு உறுப்பினர் தகுதியும் கிடையாது என்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம்.  யார் வேண்டுமானாலும் இருவாரக் காலத்திற்கு புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.  படித்த பிறகு புத்தகத்தைத் திரும்ப அளித்து விட வேண்டும்.  இந்த நூலகம் வாரம் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.  தங்கள் குழந்தைகள் படிப்பதில் ஈடுபடுகிறார்கள் என்பதில் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆர்வலர்களுக்கு மிகுந்த சந்தோஷம்; அதுவும் குறிப்பாக, இணையவழி வகுப்புகளைப் பள்ளிகள் நடத்தும் இந்த வேளையில் இது மிகவும் பயனுடையதாக இருக்கிறது.  இதே போல சண்டீகடில் ஒரு அரசு சாரா அமைப்பை நடத்திவரும் சந்தீப் குமார் அவர்கள், ஒரு மினிவேனில் நடமாடும் நூலகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்; இதன் வாயிலாக ஏழைக் குழந்தைகள் படிக்கவென இலவசமாகப் புத்தகங்களை அளிக்கிறார்.  இதைப் போலவே குஜராத்தின் பாவ்நகரிலும் இரு அமைப்புகள் மிகச் சிறப்பான செயல்கள் புரிந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியும்.   இவற்றில் ஒன்று விகாஸ் வர்த்துல் ட்ரஸ்ட்.  இந்த அறக்கட்டளை, போட்டித் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்துவரும் மாணவர்களுக்கென மிகவும் உதவிகரமான செயல்களைச் செய்கிறது.  இந்த அறக்கட்டளை 1975ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது, இதில் 5,000 புத்தகங்களோடு கூட, 140ற்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் தருவிக்கப்படுகின்றன.  இதைப் போன்றே மேலும் ஒரு அமைப்பான புஸ்தக் பரப் என்பது ஒரு நூதனமான செயல்திட்டம்.  இங்கே இலக்கிய புத்தகங்களோடு கூடவே, பிற புத்தகங்களும் இலவசமாக தருவிக்கப்படுகின்றன.  இந்த நூலகத்தில் ஆன்மீகம், ஆயுர்வேத சிகிச்சை, மேலும் பல விஷயங்களோடு தொடர்புடைய புத்தகங்களும் இருக்கின்றன.  உங்களுக்கு இவை போன்ற இன்னும் பிற முயற்சிகள் பற்றித் தெரிந்தால், நீங்கள் சமூக ஊடகங்களில் இவை பற்றி அனைவரோடும் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.  இந்த எடுத்துக்காட்டுகள் புத்தகங்கள் படித்தல் அல்லது நூலகத் திறப்பு என்பதோடு மட்டுமே கிடையாது.  இவை புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளங்கள், இவற்றில் சமுதாய முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு துறை, ஒவ்வொரு நிலையில் இருப்போரும் புதியபுதிய, நூதனமான வழிமுறைகளைக் கைக்கொண்டு வருகிறார்கள். 

ந ஹி ஞானேன ஸத்ருஷம் பவித்ர மிக வித்யதே

                  न ற்அहि ज्ञानेन सदृशं पवित्र मिह विद्यते

என்று கீதை கூறுகிறது.  அதாவது, ஞானத்திற்கு இணையாக உலகிலே புனிதமான வஸ்து வேறேதும் கிடையாது என்பது தான்.  ஞானத்தைப் பரப்புவோர் அனைவருக்கும், அனைத்து மஹானுபாவர்களுக்கும் என் இதயபூர்வமான வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து, சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ஆம் தேதியை நாம் ராஷ்ட்ரீய ஏக்தா திவஸ், அதாவது தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாட இருக்கிறோம்.  மனதின் குரலில், முன்னரும் கூட நாம் சர்தார் படேல் அவர்களைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம்.  அந்த மகத்தான ஆளுமையின் பல பரிமாணங்களைப் பற்றி விவாதித்திருக்கிறோம்.  கருத்தாழம், தீரமான தலைமை, அரசியல் தெளிவு, விவசாயத்துறை பற்றிய ஆழமான ஞானம், தேச ஒற்றுமை குறித்த அர்ப்பணிப்பு உணர்வு, போன்ற பல குணங்கள் ஒருசேர ஒரு ஆளுமையிடத்தில் பொருந்தி இருப்பது என்பது, வெகு சிலரிடத்தில் மட்டுமே காணப்படக் கூடியது.  அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?   சமஸ்தானங்களோடு உரையாடியவர், வணக்கத்துக்குரிய பாபுவின் மக்கள் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர், ஆங்கிலேயர்களுடன் போராடிக் கொண்டிருந்தவர் – இத்தனை முகங்களைக் கொண்டவரிடம் நகைச்சுவை உணர்வு பூரணமாகக் குடிகொண்டிருந்தது.  ஒருமுறை பாபு அவர்கள் சர்தாரைப் பற்றிக் கூறுகையில், சர்தார் தனது நகைச்சுவையால் தம்மை வயிறு வலிக்கச் சிரிக்கச் செய்வார் என்றும், இவ்வாறு நாளில் ஒருமுறை அல்ல பலமுறை இப்படிச் செய்வார் என்றும் தெரிவித்தார்.  இதில் நமக்கும் ஒரு கற்றல் இருக்கிறது.  சூழ்நிலைகள் எத்தனை தான் கடினமாக இருந்தாலும், உங்களுடைய நகைச்சுவை உணர்வை உயிர்ப்போடு வைத்திருங்கள்.  இது நம்மை இயல்புநிலையில் வைத்திருக்க உதவுவதோடு, நமது பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும்.  சர்தார் ஐயா இதைத் தான் செய்தார். 

எனதருமை நாட்டுமக்களே, சர்தார் படேல் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதையும் தேசத்தை ஒன்றுபடுத்துவதற்கே அர்ப்பணம் செய்தவர்.  அவர் இந்தியர்களின் மனங்களை சுதந்திரப் போராட்டத்தோடு இணைத்தார்.  இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தோடு கூடவே, விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.  அவர் சமஸ்தானங்களை நமது தேசத்தோடு ஒன்றிணைக்கும் பணியைச் செய்து முடித்தார்.  வேற்றுமையில் ஒற்றுமை காணுவது என்ற விதையை, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் விதைத்து ஊட்டமளித்தார்.

நண்பர்களே, நம்மை ஒன்றுபடுத்தும் விஷயங்களை, நாட்டின் ஒருமூலையில் வசிப்போரை பிறிதொரு மூலையில் வசிப்போரோடு இணைத்து, எல்லோரும் நம்மவரே என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியவற்றை, நமது சொல்-செயல்-நடத்தை ஆகியவற்றின் வாயிலாக ஒவ்வொரு கணமும், அனைத்து விஷயங்களிலும் நாம் இன்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.  நீங்களே பாருங்கள், கேரளத்தில் தோன்றிய ஆதி சங்கரர், பாரதநாட்டின் நான்கு திசைகளுக்கும் பயணித்து, மகத்துவம் வாய்ந்த நான்கு மடங்களை நிறுவினார்.  வடக்கே பதரிகாஸ்ரமம், கிழக்கில் பூரி, தெற்கிலே சிருங்கேரி, மேற்கில் த்வாரகை.  அவர் ஸ்ரீநகருக்கு யாத்திரை மேற்கொண்டதால் தான் அங்கே சங்கராச்சாரியார் குன்று என்ற ஒன்று இருக்கிறது.  புனிதப் பயணம் என்பது பாரதத்தை ஒன்றுபடுத்துகிறது.  ஜ்யோதிர்லிங்கங்களும் சக்திபீடங்களும் அடங்கிய அழகிய மாலையே, பாரதநாட்டை ஓரிழையில் இணைக்கிறது.  த்ரிபுரா தொடங்கி குஜராத் வரை, ஜம்மு கச்மீரம் தொடங்கி தமிழ்நாடு வரை நிறுவப்பட்ட நமது நம்பிக்கையின் மையங்கள் நம்மை ஒருங்கிணைக்கின்றன.   பக்தி இயக்கம், பாரதம் முழுவதிலும் ஒரு மிகப்பெரிய மக்கள் பேரியக்கம் ஆனது; இது நம்மை பக்தி வாயிலாக ஒன்றுபடுத்துகிறது.  நமது அன்றாட வாழ்க்கையிலும் கூட, இந்த விஷயங்கள் கலந்திருக்கின்றன, இவையே நமக்கு ஒற்றுமை என்ற சக்தியை அளிக்கிறது.  இதிலே தொலைவில் வடக்கில் இருக்கும் சிந்து நதி தொடங்கி, தென்னாட்டின் உயிரூட்டமான காவிரி வரை அனைத்தும் அடங்கும்.  மக்கள் நீராடும் போது, புனிதமான உணர்வுடன், ஒருமைப்பாட்டு மந்திரம் ஒன்றைக் கூறுவதுண்டு.

गंगेयमुनेचैवगोदावरिसरस्वतीI

नर्मदेसिन्धुकावेरिजलेSस्मिन्सन्निधिंकुरुII

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.

நர்மதே சிந்து காவேரி ஜலே அஸ்மின் சன்னிதிம் குரு, என்று.

இதைப் போலவே சீக்கியர்களின் புனித இடங்கள், நாந்தேட் சாஹிபும் பட்னா சாஹிபும் அடங்கும்.  நமது சீக்கிய குருமார்களும், தங்களது வாழ்க்கை மற்றும் நற்காரியங்கள் வாயிலாக, ஒற்றுமை உணர்வின் ஊற்றுக்கண்ணாக விளங்கினார்கள்.  கடந்த நூற்றாண்டில், நமது நாட்டிலே, டாக்டர். பாபாசாஹேப் அம்பேட்கர் போன்ற மாமனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரையும் அரசியலமைப்புச் சட்டம் வாயிலாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். 

நண்பர்களே,

Unity is Power, Unity is strength,

Unity is Progress, Unity is Empowerment,

United we will scale new heights

ஒற்றுமையே சக்தி, ஒற்றுமையே பலம்,

ஒற்றுமையே வளர்ச்சி, ஒற்றுமையே அதிகாரமளிப்பு,

ஒன்றுபட்டு நாம் புதிய சிகரங்களை அடைவோம்.

அதே போல, தொடர்ந்து நமது மனதிலே ஐயப்பாடுகளின் விதைகளை விதைக்கும் முயற்சிகளிலும், தேசத்தைப் பிரிப்பதிலும் முயலும் சக்திகளும் இருந்தே வந்திருக்கின்றன.  தேசம் ஒவ்வொரு முறையும், இந்த தீய நோக்கங்கள் உடையோருக்கு தக்க பதிலடி கொடுத்தும் வந்திருக்கிறது.  நாம் அயராது நமது படைப்பாற்றல் வாயிலாக, நேசத்தோடு, ஒவ்வொரு கணமும் முயற்சிகள் மேற்கொண்டு, நமது சின்னச்சின்ன செயல்கள் வாயிலாக, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அழகு கொஞ்சும் வண்ணங்களை வெளிப்படுத்திவர வேண்டும், ஒற்றுமையின் புதிய வண்ணத்தால் இட்டுநிரப்ப வேண்டும், இதை ஒவ்வொரு குடிமகனும் புரிய வேண்டும்.  இந்த வேளையில், நீங்கள் அனைவரும் ஒரு இணையதளத்தைக் காண வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.   ekbharat.gov.in.  இதிலே தேசிய ஒருமைப்பாடு என்ற நமது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பல முயல்வுகள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.  இதிலே ஒரு சுவாரசியமான பகுதி உள்ளது, அது இன்றைய வாக்கியம்.  ஒரு வாக்கியத்தைப் பல்வேறு மொழிகளில் எவ்வாறு பேசுகிறார்கள் என்று தினமும் இந்தப் பகுதியில் புதியதாக ஒரு வாக்கியம் இடம் பெறுகிறது, இதை நம்மால் கற்க முடியும்.  நீங்கள் இந்த இணையதளத்தில் உங்கள் பங்களிப்பை அளிக்கலாம், எப்படி ஒவ்வொரு மாநிலத்திலும், கலாச்சாரத்திலும் பல்வேறு வகையான உணவுப் பழக்கங்கள் இருக்கின்றன போன்றவற்றில் நீங்கள் பங்கெடுக்கலாம்.  அதாவது, உணவுப் பதார்த்தங்கள் வட்டார அளவிலான சிறப்பான மூலப்பொருட்களான தானியம் மற்றும் மசாலாக்கள் உதவியோடு தயாரிக்கப்படுகிறது.  இப்படிப்பட்ட உள்ளூர் உணவு செய்முறையையும், செய்பொருட்களின் பெயர்களையும், ஒரே பாரதம் உன்னத பாரதம் இணையதளம் ekbharat.gov.inஇல் பகிர்ந்து கொள்ளலாமே!!  ஒற்றுமை மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க இதைவிடச் சிறந்த வழிமுறை வேறு என்ன இருக்க முடியும்!!

நண்பர்களே, இந்த மாதம் 31ஆம் தேதியன்று கேவடியாவின் வரலாற்று சிறப்புமிக்க, ஒற்றுமைக்கான உருவச்சிலை தொடர்பாக நடைபெறவுள்ள பல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும்.  நீங்களும் இதில் கண்டிப்பாக இணையுங்கள்.

எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று வால்மீகி ஜெயந்தியை நாம் கொண்டாடவிருக்கிறோம்.  நான் மஹரிஷி வால்மீகியை வணங்குகிறேன், இந்தச் சிறப்பான வேளையில் நாட்டுமக்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மஹரிஷி வால்மீகியின் மகத்தான எண்ணம் கோடிக்கணக்கான மக்களுக்குக் கருத்தூக்கம் அளிக்கிறது, சக்தி கொடுக்கிறது.  அவர் கோடிக்கணக்கான ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக ஒளிர்கிறார்.  அவர்களுக்குள்ளே நம்பிக்கை எனும் தீபத்தை ஏற்றி வைக்கிறார்.  எந்த ஒரு மனிதனிடமும் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற உறுதியான விருப்பம் இருந்தால், அந்த மனிதன் மிக எளிதாக எந்தச் செயலையும் சாதிக்க முடியும் என்றே அவர் கூறுகிறார்.  இந்த பெரும்விருப்பம் தான் பல இளைஞர்களுக்கும் அசாதாரணமான செயல்களைப் புரியும் சக்தியை அளிக்கிறது.  மஹரிஷி வால்மீகி ஆக்கப்பூர்வமான சிந்தனைக்குப் பலம் சேர்க்கிறார்.  அவரைப் பொறுத்த மட்டில், சேவையும், மனித கண்ணியமும் அனைத்திலும் மேலானவை.  மஹரிஷி வால்மீகியின் செயல், சிந்தனை மற்றும் நோக்கம் இன்று புதிய இந்தியாவின் நமது உறுதிப்பாட்டிற்கு உத்வேகம் அளிப்பவை, வழிகாட்டுபவை.  நாம் மஹரிஷி வால்மீகியிடம் என்றும் மாறாத நன்றியுடைவர்களாய் இருப்போம்; அவர் தான் வருங்காலத் தலைமுறையினருக்கு நல்ல பாதையைக் காட்ட, இராமாயணம் போன்ற மகத்தான இதிஹாஸத்தை அருளியவர். 

அக்டோபர் 31ஆம் தேதியன்று தான் நாம் நமது முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி அம்மையாரை இழந்த நாளும் கூட.  நான் அவர்களுக்கு என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன். 

எனதருமை நாட்டுமக்களே, இன்று கச்மீரத்தின் புல்வாமா, நாடு முழுமைக்கும் கற்பித்தலுக்கான மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளித்து வருகிறது.  இன்று நாடெங்கிலும் குழந்தைகள் தங்களுடைய வீட்டுப் பாடத்தைச் செய்கிறார்கள், குறிப்பெடுக்கிறார்கள் என்றால், ஏதோ ஒரு வகையில் புல்வாமா மக்களின் கடுமையான உழைப்பு அதிலே அடங்கியிருக்கிறது.  கச்மீரத்தின் பள்ளத்தாக்குகள், நாடு முழுவதற்கும் கிட்டத்தட்ட 90 சதவீதம் பென்சில் ஸ்லேட், மரத்தாலான பட்டியின் தேவையை நிறைவு செய்து வருகிறது.  இதில் மிகப்பெரிய பங்களிப்பு புல்வாமாவினுடையது.  ஒரு காலத்தில், நாம் அயல்நாடுகளிலிருந்து பென்சில் தயாரிக்க மரத்தை இறக்குமதி செய்து வந்தோம்; ஆனால் இப்போது நமது புல்வாமா பகுதி, தேசத்தைத் தற்சார்பு உடையதாக ஆக்கி வருகிறது.  உள்ளபடியே புல்வாமாவின் இந்த பென்சில் ஸ்லேட்டுகள், மாநிலங்களுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறைக்கின்றது.  பள்ளத்தாக்கின் சினார் மரங்களில் அதிக ஈரப்பதமும், மென்மையும் இருக்கின்றன, இவை பென்சில் தயாரிக்க மிகவும் உகந்தவையாக இருக்கின்றன.  புல்வாமாவின் உக்கூ பென்சில் கிராமம் என்றே அறியப்படுகிறது.  இங்கே, பென்சில் ஸ்லேட் தயாரிக்கும் அலகுகள் பல இருக்கின்றன.  இவை வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்றன, இதிலே கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

நண்பர்களே, புல்வாமாவுக்கென தனியொரு அடையாளம் எப்போது ஏற்பட்டதென்றால், அங்கே இருக்கும் மக்கள் புதியதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்டு, இதன் பொருட்டு துணிந்தார்கள், தங்களை அர்ப்பணம் செய்தார்கள், அப்போது தான்.  இப்படிப்பட்ட செயல்வீரர்களில் ஒருவர் தான் மன்சூர் அஹ்மத் அலாயி.  தொடக்கத்தில் மன்சூல் பாய் மரத்தை வெட்டும் ஒரு எளிய தொழிலாளியாக மட்டுமே இருந்தார்.  இனிவரும் தலைமுறையினர் ஏழ்மையின் பிடியில் சிக்கி இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில், மன்சூர் பாய் புதியதாக ஒன்றைப் புரிய விரும்பினார்.  அவர் தனது பூர்வீக நிலத்தை விற்று, ஆப்பிளை சேமித்து வைக்கும் மரப்பெட்டிகளைத் தயாரிக்கும் அலகு ஒன்றைத் தொடக்கினார்.  அவர் தனது சிறிய வியாபாரத்தைச் செய்து வரும் போது, பென்சில் தயாரிக்க Poplar wood அதாவது சினார் மரம் பயனாகிறது என்று கேள்விப்பட்டார்.  இந்தத் தகவல் தெரிந்த பிறகு, மன்சூர் பாய் தனது தொழில்முனைவை வெளிப்படுத்தினார், சில பிரபலமான பென்சில் தயாரிக்கும் அலகுகளுக்கான சினார் மரத் தேவைகளை நிறைவு செய்யத் தொடங்கினார்.  மன்சூர் அவர்களுக்கு இது மிகவும் ஆதாயமாக அமைந்தது, அவரது வருவாய் சிறப்பான முன்னேற்றம் கண்டது.  காலத்திற்கு ஏற்ப அவர் பென்சில் ஸ்லேட் தயாரிக்கும் இயந்திரங்களைத் தருவித்தார், பிறகு அவர் நாட்டின் பெரியபெரிய நிறுவனங்களுக்கு பென்சில் ஸ்லேட் அளிக்கத் தொடங்கினார்.  இன்று மன்சூர் பாயின் வர்த்தகம் பலகோடி ரூபாய்கள் பெறுமானமுடையது, சுமார் 200 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.  இன்று மனதின் குரல் வாயிலாக நாட்டுமக்கள் அனைவரின் தரப்பிலும், நான் மன்சூர் பாய் உட்பட, புல்வாமாவின் உழைப்பாளி சகோதர சகோதரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் அனைவரும் நாட்டின் இளம் மனங்களுக்குக் கற்பித்தலை ஏற்படுத்தும் வகையில், உங்களின் மகத்தான பங்களிப்பை அளித்து வருகிறீர்கள்.

எனதருமை நாட்டுமக்களே, பொதுமுடக்கத்தின் போது தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்ட சேவையளித்தலின் பல முயல்வுகள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன, இவற்றை ஏதோ மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் தளவாட நிறுவனங்களே அளிக்க முடியும் என்று கிடையாது.  ஜார்க்கண்டில் இந்தப் பணியைப் பெண்களின் ஒரு சுயவுதவிக் குழு செய்து காட்டியிருக்கிறது.  இந்தப் பெண்கள், விவசாயிகளின் தோட்டங்களிலிருந்து காய்கனிகளை நேரடியாக வீடுகளுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.  இந்தப் பெண்கள் ‘ஆஜீவிகா ஃபார்ம் ஃப்ரெஷ்’ என்ற பெயர் கொண்ட ஒரு செயலியை ஏற்படுத்தினார்கள்.  இதன் வாயிலாக, எளிதாக மக்கள் காய்கனிகளை வாங்க முடிகிறது.  இந்த ஒட்டுமொத்த முயற்சியால், விவசாயிகளின் காய்கனிகளுக்கு நல்ல விலை கிடைத்தது, மக்களுக்கும் புத்தம்புதிய காய்கனிகள் கிடைத்து வந்தன.  அங்கே ‘ஆஜீவிகா ஃபார்ம் ஃப்ரெஷ்’ செயலி கருத்து மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  பொதுமுடக்க நாட்களில் இவர்கள் 50 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட காய்கனிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்கள்.  நண்பர்களே, விவசாயத் துறையில் புதிய சாத்தியக்கூறுகள் உருவாவதைப் பார்த்து, நமது இளைஞர்களும் கணிசமான எண்ணிக்கையில் இதோடு இணையத் தொடங்கி இருக்கிறார்கள்.  மத்திய பிரதேசத்தின் பட்வானியில் அதுல் பாடீதார் என்பவர் தனது பகுதியில் 4000 விவசாயிகளை டிஜிட்டல் முறையில் இணைத்து விட்டார்.  இந்த விவசாயிகள் அதுல் பாடீதாரின் இணைய-மேடை-பண்ணை-அட்டை வாயிலாக, விவசாயப் பொருட்களான உரம், விதைகள், பூச்சிகொல்லி, பூசணக்கொல்லி போன்றவற்றை வீட்டுக்கே கொண்டு சேர்த்தலால் பயனடைகிறார்கள், அதாவது விவசாயிகளின் வீடுகளுக்கே அவர்களின் தேவைகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.  இந்த டிஜிட்டல் மேடையில் நவீன விவசாயக் கருவிகளும் வாடகைக்குக் கிடைத்து வருகின்றன.  பொதுமுடக்க காலத்திலும் இந்த டிஜிட்டல் மேடை வாயிலாக விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான பொட்டலங்கள் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன.  இவற்றில் பருத்தி மற்றும் காய்கறிகளின் விதைகளும் அடங்கும்.  அதுல் அவர்களும் அவருடைய குழுவினரும், தொழில்நுட்ப ரீதியிலான விழிப்புணர்வை விவசாயிகளிடத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள், இணையவழியில் பணம் செலுத்துவதையும், பொருட்களை வாங்குவதையும் கற்பித்து வருகிறார்கள். 

நண்பர்களே, இன்றைய நாட்களில் மஹாராஷ்ட்ரத்தில் ஒரு சம்பவம் மீது என் கவனம் சென்றது.  அங்கே ஒரு விவசாயி-உற்பத்தியாளர் நிறுவனமானது, மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து விளைச்சலை வாங்கியது.  நிறுவனமானது, விவசாயிகளுக்கு இந்த முறை, அசல்விலையோடு, கூடுதலாக உபரித் தொகையையும் வழங்கியது.  விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி.  இதைப் பற்றி அவர்கள் நிறுவனத்திடம் கேட்ட போது, இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய விவசாய சட்டத்தின் வாயிலாக, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடிவதால், தங்களுக்கு நல்ல இலாபம் கிடைப்பதாகவும், இதனால் கூடுதல் இலாபத்தை விவசாயிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் கருதுவதாக அந்த நிறுவனத்தார் தெரிவித்திருக்கிறார்கள்.  இதன் மீது விவசாயிகளுக்கும் உரிமை இருப்பதால், ஊக்கத் தொகையை அளித்திருக்கிறார்கள்.  நண்பர்களே, ஊக்கத்தொகை இப்போது குறைவானதாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் இந்தத் தொடக்கம் மிகப் பெரியது.  புதிய விவசாயச் சட்டங்கள் அடிமட்டத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் காரணமாக, விவசாயிகளுக்கு சாதகமான சாத்தியக்கூறுகள் நிரம்பி இருக்கின்றன என்பது இதிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. 

எனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரலில் நாட்டுமக்களின் அசாதாரணமான சாதனைகள், நமது நாடு, நமது கலாச்சாரம் ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியெல்லாம், உங்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது.  நமது தேசம் திறமைகள் பல படைத்தவர்கள் நிறைந்தது.  நீங்களும் இப்படிப்பட்டவர்களைப் பற்றி அறிய நேர்ந்தால், அவர்களைப் பற்றிப் பேசுங்கள், எழுதுங்கள், அவர்களின் வெற்றிகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பலப்பல வாழ்த்துக்கள்.  ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், பண்டிகைகளின் போது சற்று விசேஷமாக நினைவில் கொள்ளுங்கள், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பினால் கழுவி வர வேண்டும், ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடித்துவர வேண்டும்.

நண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.

இந்த பதிவை பகிர

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
Share on email