மனதின் குரல்

மனதின் குரல் ஒலிபரப்பு நாள் : 27.09.2020

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இன்று, தனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இத்தனை நீண்ட காலம் வரையிலும், ஒன்றாக இருப்பது, எப்படி இருப்பது, நேரத்தை எவ்வாறு செலவிடுவது, ஒவ்வொரு கணத்தையும் எப்படி மகிழ்ச்சி நிறைந்ததாகக் கழிப்பது என்பது ஒரு கேள்வி. ஆனால் பல குடும்பங்கள் இடர்களைச் சந்திக்க நேர்ந்தது.

பாரம்பரியமாக நமது குடும்பங்களில் இருந்து வந்த கலாச்சாரச் சூழல் இல்லாத நிலை இன்று நிலவுகிறது. இதன் காரணமாக, இந்தச் சங்கடமான சூழலைக் கழிப்பதிலும் கூட, குடும்பங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இதில் ஒரு மகத்துவமான விஷயமும் இருக்கிறது, என்ன அது? ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது மூத்தவர் இருப்பார்கள், கதைகளைச் சொல்லுவார்கள், வீட்டில் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும், ஒரு புதிய ஆற்றல் ஊற்றெடுக்கும். நமது முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்த நெறிமுறைகள் இன்று எத்தனை தேவையானவையாக, மகத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பது அவை இல்லாத இன்றைக்கு நமக்கு உரைக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு நெறிமுறை தான் நான் முன்னர் கூறியது போல, கதை சொல்லுதல் என்ற Story telling.

நண்பர்களே, மனித நாகரிகம் எத்தனை தொன்மையானதோ அதே அளவுக்குத் தொன்மையானது கதைகளின் வரலாறும்.

‘where there is a soul there is a story’

எங்கே ஆன்மா இருக்கிறதோஅங்கே ஒரு கதையும் உண்டு.

கதைகள், மனிதர்களின் படைப்பாற்றலையும், புரிந்துணர்வையும் முன்னிறுத்துகின்றன. ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டும் வேளையிலோ, அந்தக் குழந்தையைத் தூங்க வைக்கும் வேளையிலோ கதைகளின் வல்லமை என்ன என்பதை நம்மால் பார்க்கமுடியும், உணர முடியும். நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சுற்றித் திரியும் ஒரு துறவியைப் போலவே வாழ்ந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கிராமம், புதிய மனிதர்கள், புதிய குடும்பங்கள் என என் வாழ்க்கை இருந்து வந்தது. நான்குடும்பங்களின் மத்தியில் இருக்கும் போது, குழந்தைகளோடு கண்டிப்பாக அளவளாவுவேன், சில வேளைகளில், சரி நீங்கள் எனக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்று கேட்பேன். இல்லைங்க, நாங்கள் கதை சொல்லவில்லை, நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு ஏதாவது நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லுங்கள் என்பார்கள். அதாவது அவர்களுக்குக் கதைகள் பற்றி எந்த ஒரு அறிமுகமும் இல்லை என்பதைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்களுடைய பெரும்பாலான வாழ்க்கை நகைச்சுவைத் துணுக்குகளோடே குறுகிப் போயிருந்தது.

நண்பர்களே,

கதை சொல்லுவது என்ற ஒரு வளமான பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம். நம் நாட்டிலே ஹிதோபதேசம், பஞ்சதந்திரம் போன்ற பாரம்பரியம் உடையவர்கள் என்பது நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம்.

இங்கே பசு பட்சிகள், தேவதைகள் அடங்கிய ஒரு கற்பனைமயமான உலகம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவேகம், புத்திக்கூர்மை நிறைந்த விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது. நம்நாட்டிலே கதைகளுக்கான ஒரு பாரம்பரியமே உண்டு. சமயக்கதைகளைச் சொல்வதற்கெனவே ஒரு பழமையான வழிமுறை உண்டு. இதிலே, கதாகாலக்ஷேபமும் அடங்கும். நம் நாட்டிலே பலவகையான நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கதைகள் சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது. இதை வில்லுப்பாட்டு என்று அழைக்கிறோம். இதிலே கதைகளும், இசையும் என்ற மிகக் கவர்ச்சிகரமான இணைவு காணப்படுகிறது. இந்தியாவில் பொம்மலாட்டம் என்ற ஒரு உயிர்ப்புடைய பாரம்பரியமும் உண்டு. இப்போதெல்லாம் அறிவியல் மற்றும் அறிவியல் புதினத்தோடு இணைந்த கதைகளைச் சொல்லும் பாங்கு, மக்கள் மத்தியிலே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பலர் கிஸ்ஸாகோயி என்ற கதை சொல்லும் கலையை முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. gaathastory.in என்ற ஒரு இணையதளம் பற்றிய தகவல்கள் கிடைத்தன, இதை அமர் வ்யாஸ் அவர்களோடு வேறு சிலரும் நடத்தி வருகிறார்கள். அமர் வ்யாஸ் அவர்கள் ஐ.ஐ.எம். அஹ்மதாபாதில் எம்.பி.ஏ. படிப்பு படித்த பிறகு அயல்நாடுகளுக்குச் சென்று, மீண்டும் நாடு திரும்பினார். இப்போது பெங்களூரூவில் அவர் வசித்து வருகிறார், சில நேரம் ஒதுக்கி கதைகளின் உலகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வகையாக, அவர் மிக சுவாரசியமான ஒரு பணியை ஆற்றி வருகிறார். இவருடைய முயற்சியைப் போலவே வேறு பலரும் ஊரகப்பகுதி இந்தியாவின் கதைகளை மிகச் சிறப்பான வகையிலே பிரபலப்படுத்தி வருகின்றார்கள். வைஷாலீ வ்யவஹாரே தேஷ்பாண்டே போன்ற பலர் இதை மராட்டி மொழியிலும் வெகுஜனங்களின் விருப்பமாக மாற்றி வருகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா வீரராகவன் அவர்களும் நமது கலாச்சாரத்திற்கு இசைவான கதைகளைப் பரப்பி வருவதில் ஈடுபட்டிருக்கிறார்.

இதே போல கதாலய் மற்றும் தி இந்தியன் ஸ்டோரி டெல்லிங் நெட்வொர்க் (The Indian Story Telling Network) என்ற பெயர் கொண்ட இரண்டு இணைய தளங்களும் இந்தத் துறையில் மிகச் சிறப்பான பணிகளை ஆற்றி வருகின்றன. கீதா ராமானுஜன் அவர்கள் kathalaya.orgயில் கதைகளை ஒன்று திரட்டியிருக்கிறார். அதே வேளையில் The Indian Story Telling Network வாயிலாகவும் பல்வேறு நகரங்களில் பல்வேறு கதை சொல்பவர்களுடைய ஒரு வலைப்பின்னலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூரூவில் விக்ரம் ஸ்ரீதர் என்பவர், அண்ணலோடு தொடர்புடைய கதைகளில் உற்சாகம் காட்டி வருகிறார். மேலும் பலர் இந்தத் துறையில் செயலாற்றிக் கொண்டிருக்கலாம். கண்டிப்பாக நீங்கள் அவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்று நம்மோடு பெங்களூரு கதை சொல்லும் சங்கத்தைச் சேர்ந்த சகோதரி அபர்ணா ஆத்ரேயாவும், பிற உறுப்பினர்களும் இணைந்திருக்கிறார்கள். வாருங்கள், அவர்களோடு உரையாடி, அவர்களுடைய அனுபவம் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

பிரதமர்: ஹெலோ

அபர்ணா ஆத்ரேயா: வணக்கம் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்களே. எப்படி இருக்கிறீர்கள்?

பிரதமர்: நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் அபர்ணா அவர்களே?

அபர்ணா ஆத்ரேயா: மிகவும் நன்றாக இருக்கிறேன் ஐயா. முதன்மையாக பெங்களூரூ கதை சொல்லும் நீங்கள் எங்களைப் போன்ற கலைஞர்களை இந்த மேடைக்கு அழைத்துப் பேச வைத்தமைக்கு, சங்கத்தின் தரப்பில் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர்: உங்களுடைய குழுவினர் அனைவரும் அங்கே உங்களோடு குழுமியிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன்.

அபர்ணா ஆத்ரேயா: ஆமாம், கண்டிப்பாக, ஆமாம் ஐயா.

பிரதமர்: சரி நல்லதாகப் போயிற்று. உங்களின் குழுவினரை கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன். மனதின் குரல் நேயர்களுக்கு அவர்களின் அறிமுகமும் கிட்டும், அதே வேளையில் அவர்கள் எப்படிப்பட்ட ஒரு பெரிய இயக்கத்தை நடத்தி வருகிறார்கள் என்பதும் புரிய வரும்.

அபர்ணா ஆத்ரேயா: ஐயா, நான் அபர்ணா ஆத்ரேயா, நான் இரு குழந்தைகளுக்குத் தாய், இந்திய விமானப்படையின் ஒரு அதிகாரியினுடைய மனைவி; தவிர கதை சொல்வதிலே எனக்குப் பேரார்வம் உண்டு. நான் கதை சொல்ல ஆரம்பித்து சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன, முன்னர் நான் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தேன். அப்போது நான் CSR என்று அழைக்கப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்களைத் தன்னார்வ அடிப்படையில் நிர்வகித்து வந்தேன். அந்த நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குக் கதைகள் வாயிலாக கல்வியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது, நான் கூறிய கதையை என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக் கதையைக் கூறும் வேளையில் குழந்தைகளிடத்தில் நான் கண்ட ஆனந்தத்தை சொல்லில் வடிக்க முடியாது. இதைப் பார்த்தவுடன் , கதை சொல்வதை என் வாழ்க்கையின் ஒரு இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் ஐயா.

பிரதமர்: உங்களுடைய குழுவில் வேறு யாரெல்லாம் அங்கே இருக்கிறார்கள்?

அபர்ணா ஆத்ரேயா: என்னுடன் ஷைலஜா சம்பத் இருக்கிறார்.

ஷைலஜா சம்பத்: வணக்கம் ஐயா.

பிரதமர்: வணக்கங்க.

ஷைலஜா சம்பத்: என் பெயர் ஷைலஜா சம்பத். நான் முதலில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தேன். பிறகு என்னுடைய குழந்தைகள் வளர்ந்த பிறகு நான் நாடகத்துறையில் பணியாற்றத் தொடங்கினேன், நிறைவாக கதைகள் கூறுவதில் தான் மிக அதிகமான நிறைவு காண்கிறேன்.

பிரதமர்: நன்றி.

ஷைலஜா சம்பத்: அடுத்து என்னுடன் இருப்பவர் சௌம்யா.

சௌம்யா: வணக்கம் ஐயா.

பிரதமர்: வணக்கங்க.

சௌம்யா: என் பெயர் சௌம்யா ஸ்ரீ நிவாஸன். நான் ஒரு மனோதத்துவ வல்லுநர். என் பணியினூடே நான் பெரியோர்–குழந்தைகள் என அனைவருக்கும் கதைகள் வாயிலாக மனிதர்களில் காணப்படும் நவரசங்களைத் தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறேன், கூடவே இதைப் பற்றி உரையாடலிலும் ஈடுபடுகிறேன். குணப்படுத்தவல்ல, மாற்றமேற்படுத்தவல்ல கதை கூறுதல் என்பதே எனது இலக்கு.

அபர்ணா ஜெய்ஷங்கர்: வணக்கம் ஐயா.

பிரதமர்: வணக்கங்க.

அபர்ணா ஜெய்ஷங்கர்: நான் அபர்ணா ஜெய்ஷங்கர். என்னுடைய தாய்வழித் தாத்தா பாட்டி, தந்தைவழிப் பாட்டி ஆகியோருடன் நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆகையால் இராமாயணம், புராணங்கள், கீதை பற்றிய கதைகளின் பாரம்பரியம் ஒவ்வொரு இரவும் எனக்குக் கிடைத்தது. பெங்களூரு கதை சொல்லும் சங்கம் போன்ற அமைப்பில் ஒரு கதை சொல்லுபவர் என்ற வகையில் நான் இணைவது மிக இயல்பான விஷயமாக ஆனது. என்னுடன் என்னுடைய தோழி லாவண்யா பிரசாதும் இணைந்திருக்கிறார்.

பிரதமர்: லாவண்யா அவர்களே, வணக்கம்.

லாவண்யா: வணக்கம் ஐயா. நான் தொழில்பூர்வமாக கதை சொல்பவராக மாறியிருக்கும் ஒரு மின்துறைப் பொறியாளர். என் தாத்தாவிடமிருந்து கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் நான். நான் மூத்த குடிமக்களோடு இணைந்து பணியாற்றுகிறேன். ரூட்ஸ் அதாவது வேர்கள் என்ற எனது சிறப்புச் செயல்திட்டத்தில், இந்த மூத்தோரின் குடும்பங்களுக்காக நான் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை ஆவணப்படுத்த உதவி வருகிறேன்.

பிரதமர்: லாவண்யா அவர்களே, உங்களுக்கு பல பாராட்டுக்கள். நீங்களே இப்போது கூறியதைப் போல நானும் ஒரு மனதின் குரல் நிகழ்ச்சியில் அனைவரிடத்திலும் என்ன கூறியிருந்தேன் என்றால், உங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி ஆகியோர் இருந்தால், அவர்களின் சிறுபிராய நினைவுகள் பற்றிக் கேட்டு, அவற்றைப் பதிவு செய்து கொள்ளுங்கள், இது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று கூறியிருந்தேன். நீங்கள் அனைவரும் உங்களைப் பற்றிய அறிமுகங்களை அளித்த போது, அதில் உங்களுடைய கலை, உங்களுடைய தகவல் பரிமாற்றத்திறன் ஆகியவற்றை மிகக் குறைந்த சொற்களில், மிகச் சிறப்பான வகையிலே கூறியிருந்தீர்கள், அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லாவண்யா: நன்றி ஐயா, நன்றி.

பிரதமர்: இப்போது மனதின் குரலில் உங்கள் கதைகளைக் கேட்க நமது நேயர்கள் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு கதைகளை உங்களால் கூற முடியுமா?

அனைவரும்: கண்டிப்பாக, இது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் ஐயா.

அபர்ணா ஜெய்ஷங்கர்: சரி நாம் இப்போது ஒரு ராஜா பத்தின கதையைக் கேட்கலாம். அந்த ராஜாவோட பேரு கிருஷ்ணதேவராயர், அவரோட ராஜ்ஜியத்தோட பேரு விஜயநகரம். நம்ம ராஜா இருக்காரே அவரு நிறைய நல்ல குணம் படைச்சவரு. அவரைப் பத்தி குறை சொல்லியே ஆகணும்னு சொன்னா, அவருக்கு தன்னோட மந்திரியான தெனாலி ராமன் மேல ஏகப்பட்ட அன்பு இருந்திச்சுங்கறது ஒண்ணு. அடுத்தபடியா அவருக்கு நல்ல சாப்பாடு சாப்பிடுறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்ங்கறது ரெண்டாவது. ஒவ்வொரு நாளும் பகல்நேர உணவு எப்ப வரும்னு அவரு ரொம்ப ஆவலோட காத்திட்டு இருப்பாரு. எந்த அளவுக்குன்னா, இன்னைக்கு சுவாரசியமா என்ன சமைச்சிருப்பாங்க அப்படீன்னு. ஆனா அவரோட சமையல்காரரு இருக்காரே, அவரு, பீர்க்கங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், கோவைக்காய் இவற்றைத் தான் சமைச்சுத் தருவாரு. இப்படித்தான் ஒரு நாள் சாப்பிட்டுக்கிட்டு இருந்த போது கோபம் வந்து தட்டை வீசி எறிஞ்சிட்டாரு, தன் சமையல்காரனைக் கூப்பிட்டு, நாளைக்கு சுவையான வேற ஒரு பதார்த்தத்தை செஞ்சு எடுத்திட்டு வா, இல்லைன்னா உன்னை தூக்குல போட்டுருவேன்னு கோவமா சொன்னாரு.

சமையல்காரன், பாவம் பயந்து நடுங்கியே போயிட்டான். அவன் புது காய்கறிக்கு எங்க போவான்? வேற எங்க….. நேரா ஓடிப் போய் தெனாலி ராமன் கிட்ட போய் எல்லாத்தையும் விவரமா சொல்லி அழுதிருக்கான். இதைக் கேட்ட தெனாலி ராமன் அந்த சமையல்காரனுக்கு ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாரு. அடுத்த நாள் பகல்ல ராஜா சாப்பிட வந்தாரு. சமையல்காரனைக் கூப்பிட்டாரு.

இன்னைக்காவது ஏதும் சுவையா சமைச்சிருக்கியா இல்லை தூக்குக்கயித்தைத் தயார் செய்யச் சொல்லவான்னு கேட்டாரு. பயந்து நடுங்கிக்கிட்டே அந்த சமையல்காரன், உடனடியா தட்டைப் போட்டு, அதில ராஜாவுக்கு சூடான உணவைப் பரிமாறினான். தட்டுல புதுக் காய் இருந்திச்சு. ராஜாவும் படு உற்சாகமா கொஞ்சம் காயை எடுத்து சுவைச்சுப் பார்த்தாரு. அடேங்கப்பா! அருமையான காயா இருக்கே!! பீர்க்கங்காயை மாதிரி சுவையே இல்லாமலும் இல்லை, பரங்கிக்காய் மாதிரியும் இனிக்கலை. சமையல்காரன் அதில் கலந்திருந்த மசாலாப் பொருட்கள் காயிலே நன்கு ஊறியிருந்தன. தன் விரல்களை நக்கி, சுவைச்சு சாப்பிட்ட ராஜா அந்த சமையல்காரனை அழைச்சு, இது என்ன காய், இதோட பேரு என்னன்னு கேட்டாரு. தெனாலி ராமன் சொல்லிக் கொடுத்தபடியே அவனும் பதில் சொன்னான். மகராஜா, இது மகுடம் தரிச்ச கத்திரிக்காய்ன்னான்.

பிரபு, உங்களை மாதிரியே இதுவும் காய்களுக்கு ராஜா அப்படீன்னு சொன்னதும், ராஜாவுக்கு ஏக சந்தோஷம், இனிமே நான் இந்த மகுடம் தரிச்ச கத்திரிக்காயையே சாப்பிடுவேன்னு அறிவிச்சாரு. நான் மட்டுமில்லை, நம்ம ராஜ்ஜியத்தில எல்லாருமே கத்திரிக்காயை மட்டுமே சமைக்கணும், அதையே சாப்பிடணும்னும் உத்தரவு போட்டாரு. ராஜா–பிரஜைகள் ரெண்டு பேருக்குமே பயங்கர சந்தோஷம்.

ஒருபக்கம் ஒரு புது காய் கிடைச்சுதுன்னு எல்லாரும் சந்தோஷப்பட்டாங்கன்னாலும், நாள் போகப்போக உற்சாகம் குறைய ஆரம்பிச்சுது. ஒரு வீட்டுல கத்திரிக்காய் கூட்டு செஞ்சா, இன்னொரு வீட்டுல பொறியலா செஞ்சாங்க. ஒரு வீட்டுல கத்திரிக்காய் சாம்பார்னா, இன்னொரு வீட்டில கத்திரிக்காய் வாங்கிபாத். ஒரே கத்திரிக்காயை எத்தனை விதமாத் தான் சமைக்க முடியும்? மெல்லமெல்ல ராஜாவுக்குமே சலிப்புத் தட்ட ஆரம்பிச்சுது.

ஒருநாள் போனா மறுநாளும் கத்திரிக்காய் தான். ஒரு நாள் ராஜா தன் சமையல்காரனைக் கூப்பிட்டு நல்லா திட்டினாரு. யாரு உனக்கு சொன்னாங்க, கத்திரிக்காயோட தலைமேல மகுடம் இருக்குன்னு. இனிமேல் இந்த ராஜ்ஜியத்தில யாருமே கத்திரிக்காயையே சாப்பிடக்கூடாதுன்னாரு. நாளைலேர்ந்து மத்த எந்தக் காயை வேணும்னாலும் சமை, ஆனா கத்திரிக்காயை மட்டும் சமைக்கவே கூடாதுன்னாரு. உங்க ஆணைப்படியே பிரபுன்னு சொல்லி சமையல்காரன் நேரா தெனாலி ராமன் கிட்ட போயி, அவரு காலைப் பிடிச்சுக்கிட்டு, மந்திரியாரே, ரொம்ப நன்றி, நீங்க தான் என் உசிரைக் காப்பாத்திக் கொடுத்திருக்கீங்க, உங்க ஆலோசனையால தான் என்னால எந்தக் காயை வேணும்னாலும் ராஜாவுக்கு சமைக்க முடிஞ்சிருக்குன்னான். ராஜாவை சந்தோஷப்படுத்தாத மந்திரியும் ஒரு மந்திரியான்னு சிரிச்சுக்கிட்டே தெனாலி ராமன் சொன்னாரு. இந்த மாதிரி தான் தெனாலி ராமன் – கிருஷ்ணதேவராயர் பத்தின கதைகள் உருவாச்சு, மக்களும் ஆர்வத்தோட இதைக் கேட்க ஆரம்பிச்சாங்க. நன்றி.

அனைவரும்: நன்றி ஐயா.

பிரதமர்: உங்களோட கருத்துக்கள் ரொம்ப துல்லியமா இருந்திச்சு, ரொம்ப யதார்த்தமா இருந்திச்சு, இதை சிறியவங்க–பெரியவங்கன்னு எல்லாரும் கேட்டு ஞாபகம் வச்சுக்குவாங்க. ரொம்ப அருமையா சொன்னீங்க, இதில சிறப்பான ஒரு எதேச்சை நிகழ்வுன்னு சொன்னா, நாட்டுல இப்ப ஊட்டச்சத்து மாதம் நடந்துக்கிட்டு இருக்கு, உங்களோட கதையும் உணவைப் பத்தியே தான் அமைச்சிருந்திச்சு.

பிரதமர்: உங்களைப் போலவே கதை சொல்பவர்கள் மேலும் பலர் இருக்கிறார்கள். நாம எப்படி நம்ம நாட்டோட புதிய தலைமுறையினருக்கு நம்ம மகத்தான மனிதர்கள், மகத்தான தாய்மார்கள்–சகோதரிகளைப் பத்தி தெரிவிக்கலாம். கதைகள் மூலமா அவங்களோட நாம எப்படி இணைவது. இந்தக் கதை சொல்லுதல் கலையை நாம எப்படி அதிகமா பிரச்சாரம் செய்வது, இதை எப்படி மேலும் பிரபலப்படுத்துவது, வீடுகள்தோறும் நல்ல கதைகள் சொல்லப்படணும், நல்ல கதைகளைக் குழந்தைகள் கேட்கணும், இப்படி செஞ்சா மக்கள் அனைவருக்கும் பெரிய உபகாரமா இருக்கும். இப்படிப்பட்டதொரு சூழலை எப்படி ஏற்படுத்துவதுங்கற திசையில நாம எல்லாரும் இணைஞ்சு பணியாற்றணும். உங்க எல்லாரோட உரையாடினதும் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளிச்சுது. உங்க எல்லாருக்கும் என்னோட நல்வாழ்த்துக்கள். நன்றி.

அனைவரும்: நன்றி ஐயா.

கதைகள் வாயிலாக, கலாச்சாரத் தொடர் பெருக்கை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதை இந்த சகோதரிகள் கூறக் கேட்டீர்கள். நான் இவர்களோடு உரையாடியது மிக நீண்டதாக இருந்தது, ஆனால் மனதின் குரலுக்கு என ஒரு குறித்த கால அளவு இருப்பதால், காலத்தின் கட்டாயம் கருதி, அவர்களுடனான எனது உரையாடல் முழுவதையும் நான் எனது NarendraModi செயலியில் தரவேற்றம் செய்கிறேன். கதைகள் அனைத்தையும் கண்டிப்பாக நீங்கள் அதில் கேளுங்கள். அவற்றின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நான் மனதின் குரலில் உங்களுக்கு அளித்திருக்கிறேன். குடும்பத்தில், ஒவ்வொரு வாரமும், நீங்கள் கதைகளுக்காகவென்றே கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள் என்று நான் உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். மேலும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு வாரமும், ஒரு விஷயத்தைத் தீர்மானம் செய்து கொண்டு, எடுத்துக்காட்டாக, கருணை, புரிந்துணர்வு, பராக்கிரமம், தியாகம், வீரம், என இப்படி ஏதாவது ஒரு உணர்வு, ரசம் பற்றித் தொடர்புடைய கதையை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தேட வேண்டும், அனைவருமாக இணைந்து ஆளுக்கொரு கதையைக் கூற வேண்டும். குடும்பத்தில் எத்தனை பெரிய கருவூலமே ஏற்பட்டுப் போகும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். இது ஒரு ஆய்வுப்பணி, அனைவரும் மிகவும் மகிழ்வார்கள், குடும்பத்தில் ஒரு புதிய உயிரோட்டம், புதிய சக்தி பிறக்கும். இதைப் போலவே நாம் வேறு ஒரு செயலையையும் செய்யலாம். கதை சொல்பவர்கள் அனைவரிடத்திலும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். நமது கதைகளில் நாம் அடிமைப்பட்டுக் கிடந்த இருண்ட காலகட்டம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் சம்பவங்களை நீங்கள் உங்கள் கதைகள் வாயிலாக பரப்புரை செய்ய முடியுமா? குறிப்பாக, 1857 முதல் 1947 வரையிலான அனைத்து சிறிய–பெரிய சம்பவங்களை, நமது புதிய தலைமுறையினருக்கு, கதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தலாமே!! கதை சொல்லும் இந்தக் கலை, தேசத்தை மேலும் பலமுடையதாக ஆக்கும், மேலும் அதிகம் பரப்ப வேண்டும், அவை இயல்பாகவே மாற வேண்டும். வாருங்கள் நாம் இந்தத் திசை நோக்கிப் பயணப்படுவோம்.

எனதருமை நாட்டுமக்களே,

நாம இப்ப கதைகள் உலகத்திலேர்ந்து, ஏழு கடல்கள் தாண்டிப் பயணிக்கலாம், இந்தக் குரலைக் கேளுங்க.

”வணக்கம் சகோதர சகோதரிகளே, என் பேர் சேது தேம்பேலே. நான் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில வசிக்கறேன்.பிப்ர்வரியில இந்தியாவோட மிகப்பெரிய சமயத் திருவிழாவான கும்பமேளாவுல கலந்து கொள்ளக்கூடிய பெரிய பாக்கியம் எனக்குக் கிடைச்சுது. இதை நான் ஒரு பெரிய கௌரவமான விஷயமாத் தான் பார்க்கறேன். கும்ப மேளாவுல பங்கெடுத்துக்கிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு, இந்திய நாட்டோட கலாச்சாரத்தைப் பார்த்து என்னால நிறைய கத்துக்க முடிஞ்சுது. மீண்டும் ஒருமுறை இந்தியா வர்றதுக்கான சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைக்கணும்னு நான் வேண்டிக்கறேன்; ஏன்னா நாங்க இந்தியா பத்தி மேலும் தெரிஞ்சுக்க ஆசைப்படுறோம். வணக்கம்.

பிரதமர்: சுவாரசியமாக இருந்தது இல்லையா? இவர் தான் மாலி நாட்டைச் சேர்ந்த சேது தேம்பேலே. மாலி….. இந்தியாவை விட்டுத் தொலைவில், மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும், நாலாபுறங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு பெரிய நாடு. சேது தேம்பேலே அவர்கள், மாலியின் கிடா என்ற ஒரு நகரத்தில், ஒரு பப்ளிக் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார், குழந்தைகளுக்கு ஆங்கிலம், இசை மற்றும் ஓவியம் வரைதல் பயிற்றுவிக்கிறார். ஆனால் அவருக்கு மேலும் ஒரு அடையாளம் உண்டு. மக்கள் அவரை மாலி நாட்டின் இந்திய பாபு என்றும் அழைக்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது அவர் மிகுந்த பெருமிதம் கொள்கிறார். ஒவ்வொரு ஞாயிறன்றும், பிற்பகலில் மாலி நாட்டில் ஒரு மணிநேரம் வரை வானொலியில் நிகழ்ச்சியை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் பெயர் Indian Frequency on Bollywood songs. இதை இவர் கடந்த 23 ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஃப்ரெஞ்சு மொழியோடு கூடவே மாலி நாட்டின் வழக்குமொழியான பம்பாராவிலும் தனது உரையை நிகழ்த்துகிறார். இதை பெரிய நாடக பாணியில் புரிகிறார். இந்தியாவிடம் அவர் மனதில் மிகப்பெரிய அன்பு இருக்கிறது. இந்தியாவிடத்தில் அவருக்கு இருக்கும் பாசத்துக்கு மேலும் ஒரு காரணம் அவருடைய பிறந்த தினமும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தான். சேது அவர்கள் 2 மணிநேரம் கொண்ட மேலும் ஒரு நிகழ்ச்சியை, ஒவ்வொரு ஞாயிறன்று இரவும், 9 மணிக்குத் தொடக்குகிறார்; இதில் அவர் பாலிவுட்டின் ஒரு முழுத்திரைப்படக் கதையை, ஃப்ரெஞ்சு மொழியிலும் பம்பாராவிலும் கூறுகிறார். சில வேளைகளில் ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சி பற்றி விவரிக்கும் வேளையில் இவரே கூட தனது நேயர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்தவும் செய்கிறார். சேது அவர்களின் தந்தையார் தான் இவருக்கு இந்திய கலாச்சாரம் பற்றிய தகவல்களை அளித்தார். அவரது தந்தையார், திரைப்படம், திரையரங்கு ஆகியவற்றில் பணியாற்றியிருக்கிறார், அங்கே இந்தியத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு வந்தன. இந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று அவர் ஹிந்தி மொழியில் ஒரு காணொளி வாயிலாக, இந்திய மக்களுக்கு நாட்டின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இன்று அவருடைய குழந்தைகள் இந்தியாவின் தேசிய கீதத்தை மிக எளிதாகப் பாடுகிறார்கள். சேது அவர்கள் கும்பமேளாவுக்கு வருகை புரிந்த போது, அவர் இடம் பெற்றிருந்த குழுவை நான் சந்திக்க நேர்ந்தது. இந்தியாவின் பொருட்டு அவர் மனதில் இருந்த பாசம், நேசம், அன்பு ஆகியன உண்மையிலேயே கர்வம் கொள்ள செய்வதாக இருந்தன. என் மனம் நிறை நாட்டுமக்களே, யார் பூமியோடு திடமான தொடர்புடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் மிகப்பெரிய புயல்களிலும் அதே உறுதிப்பாட்டோடு விளங்குவார்கள் என்பது நாட்டில் நிலவும் ஒரு வழக்கு.

கொரோனாவின் இந்தக் கடினமான வேளையில் நமது விவசாயத் துறையில், நமது விவசாயிகள் இந்த வழக்கிற்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டுகள். இந்தச் சங்கட காலத்திலும் நமது நாட்டின் வேளாண்துறை, தனது பலத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. நண்பர்களே, நாட்டின் வேளாண்துறை, நமது விவசாயிகள், நமது கிராமங்கள் ஆகியன தற்சார்பு பாரதத்தின் ஆதாரங்கள்.

இவை பலமாக விளங்கினால் தான் தற்சார்பு பாரதத்தின் அஸ்திவாரம் பலமானதாக அமையும். கடந்த சில காலமாகவே இந்தத்துறை, சுயமாகவே பல தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது, பல தவறான கருத்துக்களைத் தகர்க்க முயன்றிருக்கிறது. என்னிடத்தில் பல விவசாயிகள் எழுதியிருக்கிறார்கள், விவசாயிகளின் சங்கங்களோடு நான் பேசியும் இருக்கிறேன். விவசாயத்தில் புதியபுதிய பரிமாணங்கள் ஏற்பட்டு வருகின்றன, வேளாண்மையில் உருவாகிவரும் மாற்றங்கள் ஆகியன பற்றி அவர்கள் கூறுகிறார்கள். அவர்களும் மற்றவர்களும் கூறுவதையும், என் மனம் தெரிவிப்பதையும், இன்று மனதின் குரலில் நான் கூறவிருக்கிறேன். ஹரியாணாவின் சோனீபத் மாவட்டத்தில் நமது விவசாய சகோதரர் ஒருவர் வசிக்கிறார். அவர் பெயர் கன்வர் சௌஹான் அவர்கள். தனது விளைபொருட்களான பழங்கள், காய்கறிகளைச் சந்தைக்கு வெளியே விற்பதில் தனக்கு எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டன என்பதை அவர் தெரிவித்தார். அவர் சந்தைக்கு வெளியே தன் விளைபொருட்களை விற்றால், அவருடைய விளைபொருட்கள் மட்டுமல்லாமல், அவருடைய வண்டியும் கூட கைப்பற்றப்பட்டு விடும் என்று கூறினார். ஆனால் 2014ஆம் ஆண்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் குழுச் சட்டத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், அவருக்கும் சரி, அக்கம்பக்கத்திலிருந்த மற்ற விவசாயிகளுக்கும் பெரும் ஆதாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, அவர் தனது கிராமத்தின் சக விவசாயிகளுடன் இணைந்து ஒரு விவசாய விளைபொருள் குழுவை நிறுவியிருக்கிறார். இன்று கிராமத்தின் விவசாயிகள், சோளம், பேபிகார்ன் ஆகியவற்றைப் பயிர் செய்கிறார்கள். அவர்களின் விளைபொருட்களை, இன்று தில்லியின் ஆஸாத்புரின் சந்தை, பெரிய சில்லரை வியாபார சங்கிலித் தொடர் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றில் அளித்து வரப்படுகிறது. இன்று கிராமத்தில்

விவசாயிகள் சோளம் மற்றும் பேபிகார்னை விளைவிக்கிறார்கள், ஏக்கருக்கு 2 ½ இலட்சத்திலிருந்து 3 இலட்சம் ரூபாய் வரை, ஒவ்வொரு ஆண்டும் சம்பாதிக்கிறார்கள். இதே கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் வலைவீட்டை உருவாக்கி, பாலி வீட்டை ஏற்படுத்தி, தக்காளி, வெள்ளரி, சிம்லா மிளகாய், இவற்றின் பலவகைகளை விளைவிக்கிறார்கள், ஒவ்வொரு ஏக்கரிலும், ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். இந்த விவசாயிகளிடத்திலே என்ன வித்தியாசம் தெரியுமா?

தங்களுடைய பழங்கள்–காய்கறிகளை, அவர்களால் எங்கு வேண்டுமானாலும், யாரிடத்தில் வேண்டுமானாலும் விற்கும் சக்தி இருக்கிறது, இந்தச் சக்தி தான் அவர்களின் முன்னேற்றத்துக்கான ஆதாரம். இந்தச் சக்தி தான் நாட்டின் பிற விவசாயிகளுக்கும் கிடைத்திருக்கிறது. பழங்கள்–காய்கறிகள் மட்டுமல்லாமல், தங்களுடைய வயல்களில் அவர்கள் பயிர் செய்யும், தானியங்கள், கோதுமை, கடுகு, கரும்பு ஆகியவற்றையும் தங்கள் விருப்பத்திற்கேற்ப, எங்கே அதிக விலை கிடைக்கிறதோ, அங்கே, விற்க இப்போது அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது.

நண்பர்களே,

3-4 ஆண்டுகள் முன்பாக, மஹாராஷ்டிரத்தில், பழங்கள் மற்றும் காய்கறிகளை வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்தும் குழுக்களின் வரையறையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். இந்த மாற்றம், எப்படி மஹாராஷ்டிரத்தின் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகளின் நிலையை மாற்றியது என்பதற்கான எடுத்துக்காட்டு, ஸ்ரீ சுவாமி சமர்த் விவசாயி உற்பத்தியாளர் நிறுவனம் என்ற விவசாயிகள் சங்கம். புனே மற்றும் மும்பையில் வாராந்திர சந்தையை விவசாயிகளே நடத்துகிறார்கள். இந்தச் சந்தைகளில் சுமார் 70 கிராமங்களின், 4,500 விவசாயிகளின் உற்பத்திப் பொருள்கள், நேரடியாக விற்கப்படுகின்றன. இங்கே இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. ஊரகப்பகுதி இளைஞர்கள், சந்தையில் விவசாயப் பொருள்கள் மற்றும் விற்பனை ஆகியவற்றில் நேரடியாக பங்கெடுக்கிறார்கள். இதன் நேரடி லாபம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது, கிராமங்களின் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

மேலும் ஒரு எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் காணக் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் வாழை சாகுபடியாளர்கள் கம்பெனி, பெயருக்குத் தான் ஒரு கம்பெனி. உண்மையில், இது விவசாயிகள் இணைந்து ஏற்படுத்தி இருக்கும் ஒரு சங்கம் தான். அதிக நெகிழ்ச்சித் தன்மை உடைய முறை இது, அதுவும் 5-6 ஆண்டுகள் முன்பாகத் தான் உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த விவசாயிகள் சங்கம், பொது முடக்கத்தின் போது அருகிலே இருக்கும் கிராமங்களிலிருந்து பலநூறு மெட்ரிக் டன் அளவுடைய காய்கறிகள், பழங்கள், வாழை ஆகியவற்றை வாங்கி, சென்னை மாநகரில், காய்கனிகளின் ஒரு combo kitஐ உருவாக்கினார்கள். சிந்தித்துப் பாருங்கள், எத்தனை இளைஞர்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பை அளித்திருப்பார்கள்!! மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இடைத்தரகர்கள் இல்லாமையினால், விவசாயிகளுக்கும் ஆதாயம், நுகர்வோருக்கும் ஆதாயம். இதே போல, லக்னௌவிலும், ஒரு விவசாயிகளின் சங்கம் இருக்கிறது. அவர்கள் “இராதா ஃபார்மர் ப்ரொட்யூசர்” என்று இதற்குப் பெயரிட்டார்கள். இவர்களுமே கூட, பொதுமுடக்கத்தின் போது விவசாயிகளின் வயல்களிலிருந்து நேரடியாக காய்கனிகளை வாங்கி, நேரடியாகவே லக்னௌவின் சந்தைகளில் விற்பனை செய்தார்கள். இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை, விரும்பிய லாபம் ஆகியன ஒருசேரக் கிடைத்தன. நண்பர்களே, குஜராத்தின் பனாஸ்காண்டாவின் ராம்புரா கிராமத்தில், இஸ்மாயில் பாய் என்ற ஒரு விவசாயியுடைய கதை மிக சுவாரசியமானது.

இஸ்மாயில் பாய் விவசாயம் செய்ய விரும்பினார், ஆனால் இப்போது விவசாயத்தில் லாபம் கிடைக்காது என்ற பொதுவான கருத்து நிலவுவதால், அவருடைய குடும்பத்தாருக்கும் சற்றே கவலையாக இருந்தது. இஸ்மாயில் பாய் உடைய தந்தையும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார், ஆனால் பெரும்பாலும் அவருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டு வந்தது. ஆகையினால் தந்தையாருக்கும் கவலையாகவே இருந்தது. ஆனால் குடும்பத்தாருடைய ஆட்சேபங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் இஸ்மாயில் பாய், தான் விவசாயம் செய்யப் போவதாகத் தீர்மானம் செய்தார். விவசாயம் இலாபகரமான தொழில் இல்லை என்ற நினைப்பையும், நிலையையும் மாற்றிக் காட்டப் போவதாக உறுதிப்பாடு கொண்டார். அவர் விவசாயத்தில் ஈடுபட்டு, புதிய நூதனமான அணுகுமுறைகளைக் கைக்கொண்டார். அவர் சொட்டுநீர்ப் பாசனம் செய்தார், உருளை நடவு செய்தார், இன்று அவர் சாகுபடி செய்திருக்கும் உருளைக் கிழங்குகள் ஒரு அடையாளமாகவே மாறியிருக்கின்றன. மிகச் சிறந்த தரம் வாய்ந்த உருளைக்கிழங்குகளை அவர் பயிர் செய்து வருகிறார். இஸ்மாயில் பாய், தனது உருளைக்கிழங்குகளை நேரடியாகவே பெரியபெரிய நிறுவனங்களிடம் விற்கிறார்.

இடைத்தரகர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை, இதன் விளைவாக நல்ல இலாபம் ஈட்டி வருகிறார். இப்போது அவர் தன்னுடைய தந்தையின் அனைத்துக் கடன்களையும் அடைத்து விட்டார். ஒரு மிகப்பெரிய விஷயம் தெரியுமா?

இஸ்மாயில் பாய் இன்று தனது பகுதியில், பல நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் உதவி புரிந்து வருகிறார். அவரது வாழ்க்கை இன்று மாறிப் போனது.

நண்பர்களே, இன்றைய தேதியில் வேளாண்மையில் நாம் எத்தனை புதிய புதுமைகளைப் புகுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். இந்தப் புதுமைகளில், புதியபுதிய வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியனவும் அடங்கும். மணிப்பூரில் வசிக்கும் விஜய்சாந்தி அவர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பைப் புகுத்தியதால், அதிகம் பேசப்பட்டு வருகிறார். அவர் தாமரைத்தண்டிலிருந்து நாரினை ஏற்படுத்தும் ஒரு ஸ்டார்ட் அப்பை ஏற்படுத்தினார். இன்று அவருடைய நூதனம், தாமரை விளைச்சல் மற்றும் துணிகளில் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு கடந்த காலத்திலிருந்து ஒரு விஷயத்தை மீள்நினைவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 101 ஆண்டு பழமையான விஷயம். அது 1919ஆம் ஆண்டு. ஆங்கிலேயர்கள் ஆட்சி, ஜலியான்வாலாபாகில், அப்பாவி மக்களைப் படுகொலை செய்தது. இந்தப் படுகொலைக்குப் பிறகு 12 வயதான ஒரு சிறுவன் அந்த சம்பவ இடத்திற்குச் சென்றான். அவன் குதூகலமும், குழந்தைத்தனமும் நிறைந்த சிறுவன் என்றாலும், அவன் ஜலியான்வாலாபாகில் பார்த்தவை அவன் சிந்தையை உலுக்கியது. அவன் பேச்சற்றுப் போனான், எப்படி ஒருவரால் இத்தனை கருணையே இல்லாமல் கொலை புரிய முடியும் என்ற விஷயம் அவன் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. குழந்தைத்தனமே உருவான அந்தச் சிறுவன் மனதில் சீற்றப்புயல் உருக்கொண்டது. அதே ஜலியான்வாலாபாகில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிடுவது என்ற சபதமேற்றார். நான் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? உயிர்த்தியாகம் புரிந்த வீரர் பகத்சிங் பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆம், தியாகி பகத்சிங்கின் பிறந்த தினம் நாளை செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதி, கொண்டாட விருக்கிறோம். நாட்டுமக்கள் அனைவருடனும் இணைந்து வீரம் மற்றும் சாகசத்தின் அடையாளமாக விளங்கும் தியாகி பகத்சிங்கிற்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். உலகின் பெரும்பகுதியில் ஆட்சி செலுத்திவந்தவர்கள், அவர்களுடைய ஆட்சியில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று சொல்லப்பட்டு வந்தவர்கள், இத்தனை மகத்தான பலம் படைத்தவர்களின் யதேச்சாதிகாரத்தை, வெறும் ஒரு 23 வயது நிரம்பிய இளைஞன் குலைநடுங்கச் செய்துவிட்டான் என்பதை உங்களால் சற்றேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தியாகி பகத்சிங் பராக்கிரமம் நிறைந்தவர் மட்டுமல்ல, அவர் மெத்தக் கற்றவர், சிந்தனையாளரும் கூட. தனது வாழ்க்கையைப் பற்றி சற்றும் கவலையேபடாமல், பகத்சிங் அவர்களும் ஏனைய பல புரட்சியாளர் சகாக்களும் புரிந்த சாகசச் செயல்கள், நாட்டின் விடுதலைக்கு மிகப்பெரியதொரு பங்களிப்பை அளித்தன.

தியாகி–வீரன் பகத்சிங்கின் வாழ்க்கையிலிருந்து மேலும் ஒரு அருமையான பக்கம்…… அவர் குழுவாகப் பணியாற்றுவதன் மகத்துவத்தை மிகச் சிறப்பாகப் புரிந்திருந்தார். லாலா லாஜ்பத்ராய் அவர்களிடத்தில் இவருக்கு இருந்த அர்ப்பணிப்பாகட்டும், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய புரட்சியாளர்களுடன் இவருக்கு இருந்த அணுக்கமாகட்டும்….. தனிப்பட்ட கௌரவம் என்பதே இவருக்கு ஒரு பெரிய விஷயமாக எப்போதும் இருந்ததில்லை.

அவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஒரே இலக்கு, ஒரே இலட்சியத்தின் பொருட்டே வாழ்ந்தார், இதை முன்னிட்டே உயிர்த்தியாகமும் புரிந்தார். அவருடைய பெருலட்சியம், இந்தியாவில் அநியாயம் புரிந்து வந்த ஆங்கிலேயக் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுவிப்பது தான். நான் Namo செயலியில், ஹைதராபாதின் அஜய் எஸ்.ஜி. அவர்களின் ஒரு கருத்தைப் படித்தேன். இன்றைய இளைஞர்களால் எப்படி பகத் சிங்காக மாற முடியும் என்று அஜய் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். நம்மால் பகத் சிங் அவர்களைப் போல ஆக முடிகிறதோ இல்லையோ, ஆனால் பகத்சிங்கினைப் போல தேசப்பற்று, தேசத்திற்காக ஏதோ ஒன்றை சாதித்துக் காட்டுவது என்ற தீபத்தை நாம் நம் மனங்களிலே ஏற்றிப் பயணிப்போம். தியாகி பகத் சிங்கிற்கு இதுவே நாம் அளிக்கும் மிகப்பெரிய சிரத்தாஞ்சலிகளாக இருக்க முடியும். நான்கு ஆண்டுகள் முன்பாக, கிட்டத்தட்ட இதே சமயத்தில் தான், துல்லியத் தாக்குதல் நடந்த போது, உலகம் நமது இளைஞர்களின் சாகசம், வீரம், அச்சமின்மை ஆகியவற்றைப் பார்த்தது. நமது வீரம்நிறை இராணுவத்தினர் ஒரு மிகப்பெரிய நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள், என்ன விலை கொடுத்தேனும் இந்தியத் தாயின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் காப்பது என்பதே அது. அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பற்றி சற்றேனும் கவலைப்படாமல், தங்களுடைய கடமைப் பாதையிலிருந்து கொஞ்சமும் விலகாது, முன்னேறினார்கள். அவர்கள் எப்படிப்பட்ட வெற்றியை ஈட்டினார்கள் என்பதை நீங்களே பார்த்தீர்கள். பாரத அன்னைக்குப் பெருமை சேர்த்தார்கள்.

என் இனிய நாட்டுமக்களே, இனிவரும் நாட்களில் நாட்டுமக்களான நாமனைவரும் மகத்தானவர்களை நினைத்துப் பார்ப்போம். அவர்கள் இந்தியாவைப் படைக்க, என்றும் அழிக்க முடியாத பங்களிப்பை அளித்துச் சென்றிருக்கிறார்கள். அக்டோபர் மாதம் 2ஆம் தேதியானது நம்மனைவருக்கும் பவித்திரமான, கருத்தூக்கம் அளிக்கவல்ல ஒரு நாள். இந்த நாளன்று தான் இந்திய அன்னையின் இரண்டு சத்புத்திரர்களான அண்ணல் காந்தியடிகள், லால் பகாதுர் சாஸ்திரி ஆகியவர்களை நினைவில் கொள்ளும் தினம்.

வணக்கத்திற்குரிய அண்ணலின் சிந்தனைகளும், ஆதர்சங்களும் முந்தைய காலத்தை விட இன்று மேலும் அதிகமாகப் பயனுடையவையாக இருக்கின்றன. அண்ணலின் பொருளாதாரக் கருத்துக்களின் உணர்வினை நாம் பற்றிக் கொண்டிருந்தால், புரிந்து கொண்டிருந்தால், அந்தப் பாதையில் பயணப்பட்டிருந்தால், இன்று தற்சார்பு பாரத இயக்கத்திற்கான தேவையே ஏற்பட்டிருக்காது. காந்தியடிகளின் பொருளாதாரச் சிந்தனையில், பாரதத்தின் நாடி நரம்புகளைப் பற்றிய புரிதல் இருந்தது, அதில் பாரதத்தின் மணம் கமழ்ந்தது. நமது அனைத்துச் செயல்களும், பரம ஏழைக்கும் நலன் ஏற்படுத்துவனவாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தான் அண்ணலின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அதே நேரத்தில், சாஸ்திரி அவர்களின் வாழ்க்கை, பணிவு மற்றும் எளிமை பற்றிய செய்தியை நமக்களித்துச் செல்கிறது. அக்டோபர் மாதம் 11ஆம் தேதி என்பது நமக்கெல்லாம் மிகவும் விசேஷம் நிறைந்த ஒன்றாகும். இந்த நாளன்று தான், பாரத் ரத்னா, லோக்நாயக் ஜெய் பிரகாஷ் அவர்களை, அவர்களுடைய பிறந்த நாளன்று நாம் நினைவில் இருத்துகிறோம். ஜே.பி. அவர்கள் நமது ஜனநாயக விழுமியங்களைக் காக்க முதன்மையான பங்குப்பணி ஆற்றியிருக்கிறார். பாரத் ரத்னா நானாஜி தேஷ்முக் அவர்களையும் இந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று நினைவு கூர்கிறோம்.

நானாஜி தேஷ்முக், ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஜே.பி. அவர்கள் ஊழலுக்கு எதிராகப் போரிட்டு வந்த போது, பட்னாவில் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

அப்போது நானாஜி தேஷ்முக் அவர்கள், அந்தத் தாக்குதலை தன் மீது வாங்கிக் கொண்டார். இந்தத் தாக்குதல் காரணமாக நானாஜிக்கு கணிசமான காயம் ஏற்பட்டாலும், ஜே.பி. அவர்களைக் காப்பாற்றுவதில் அவர் வெற்றி பெற்றார். வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதியன்று ராஜ்மாதா விஜய்ராஜே சிந்தியா அவர்களின் பிறந்தநாளாகும். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் மக்களின் சேவைக்கே அர்ப்பணித்திருந்தார். ஒரு ராஜகுடும்பத்தில் பிறந்த அவரிடத்தில், செல்வம், சக்தி, சாதனங்கள் என எந்த ஒரு குறைவுமே கிடையாது. ஆனாலும் கூட அவர் தனது வாழ்க்கையை, ஒரு அன்னையைப் போல, தாய்மை உணர்வோடு, மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர் அவர். இந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதியன்று அவருடைய நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நிறைவடையவிருக்கின்றன. மேலும் இன்று நான் ராஜ்மாதா அவர்களைப் பற்றிப் பேசும் வேளையில், மிக உணர்ச்சிபூர்வமான ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அவருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல சம்பவங்களைச் சொல்லலாம். ஆனால் இன்று ஒரு சம்பவத்தை நான் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரை, நாங்கள் ஒரு ஏகதா யாத்திரையை மேற்கொண்டோம். டாக்டர். முரளி மனோகர் ஜோஷி அவர்களின் தலைமையில் இந்த யாத்திரை நடந்து வந்தது. டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர் அதிகம் இருப்பவை. நாங்கள் இரவில் சுமார் 12-1 மணி வாக்கில் மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் அருகே உள்ள ஷிவ்புரியை வந்தடைந்தோம். காலையிலிருந்து பயணப்படுவதால் களைப்பு நீங்க தங்குமிடம் வந்து குளித்து இளைப்பாறுவது, அடுத்த நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது எங்கள் வழக்கம். சுமார் 2 மணியளவில், நான் குளித்துத் துணி துவைத்த பின்னர் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது வாயிற்கதவு தட்டப்பட்டது. நான் கதவைத் திறந்து பார்த்தால், அங்கே ராஜ்மாதா சாஹிப் நின்று கொண்டிருந்தார். விறைக்க வைக்கும் குளிர்காலம், நான் ராஜ்மாதா சாஹிபைப் பார்த்தவுடனே திகைத்துப் போனேன். அன்னைக்கு வணக்கம் தெரித்து, அம்மா, நடுநிசியில் ஏன் அம்மா வந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை மகனே, முதலில் இந்த சூடான பாலைப் பருகு, பிறகு உறங்கச் செல் என்றார்கள். மஞ்சள் பொடி கலந்த பாலைத் தானே கொண்டு வந்திருந்தார்கள். ஆம், ஆனால் அடுத்த நாள் காலையில் தான் தெரிந்து, அவர் எனக்கு மட்டுமல்ல, எங்கள் யாத்திரையில் இருந்த 30-40 பேர்களுக்கும், அதில் இருந்த ஓட்டுநர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் என அனைவரின் அறைகளுக்கும் சென்று தானே இரவு 2 மணிக்குப் பால் அளித்திருக்கிறார். அத்தகைய அன்னையின் அன்பை என்னால் எவ்வாறு மறக்க முடியும்? அன்னையின் அன்பு என்றால் என்ன, தாய்மை உணர்வு என்றால் என்ன என்பதை இந்தச் சம்பவம் எனக்கு உணர வைத்தது.

இப்படிப்பட்ட மகத்தான மாணிக்கங்களும் நமது பூமியை, தங்களுடைய தியாகத்தாலும், தவத்தாலும் வளப்படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் அடைந்திருக்கும் பெரும் பாக்கியம். நாமனைவரும் இணைந்து, இப்படிப்பட்ட மாமனிதர்களுக்குப் பெருமிதம் ஏற்படுத்தக்கூடிய ஒரு பாரதத்தை நிர்மாணிப்போம். அந்த பாரதத்தில் அவர்கள் கண்ட கனவுகளை நமது மனவுறுதியால் நனவாக்குவோம், வாருங்கள்.

எனதருமை நாட்டுமக்களே, கொரோனா பீடித்திருக்கும் இந்த காலகட்டத்தில் நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன், கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள். முகக்கவசம் அணியாமல் எங்கும் செல்லாதீர்கள். ஒரு மீட்டர் இடைவெளி என்ற விதிமுறை, உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தாரையும் காக்க வல்லது. இந்த சில விதிமுறைகள், இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் நம் வசம் இருக்கும் ஆயுதங்கள். இவையே குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பலப்படுத்தும் பலமான கருவிகள்.

மேலும் ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது. மருந்து கண்டுபிடிக்கப்படாத வரை, நாம் நமது செயல்பாடுகளில் தளர்ச்சியைக் காட்டக் கூடாது. நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள், உங்கள் குடும்பத்தாரும் ஆரோக்கியமாக இருக்கட்டும் என்ற இந்த நல்விருப்பங்களைத் தெரிவித்து பலப்பல நன்றிகளை அளிக்கிறேன்.

வணக்கம்.

இந்த பதிவை பகிர

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
Share on email